chinnatha sweetaa - சின்னதா ஸ்வீட்டா


posted by Tamilnambi on ,

6 comments


மணி மூன தாண்டி முப்பது நிமிஷம் ஆச்சு. நான் இங்க வந்து நின்னப்போ கம்பீரமா மேல வானத்த பாத்து கை காட்டிட்டு இருந்த மணிகூண்டு கடிகாரத்தோட மணி முள்ளும் கூட போக போக டயர்ட் ஆகி இப்போ பூமிய பாத்து இறங்கி வந்துட்டிருக்கு. "ஆனா நீ மட்டும் டயர்ட் ஆகி கிளம்பிராதடா !" ன்னு மனசுக்குள்ள ஒரு குரல் ! அதே சமயம் " ஏன்டா ! பண்றதுக்கு எத்தனையோ வேல இருக்கும் போது இதெல்லாம் ஒரு பொழப்பா ! த்தூ !" அப்படின்னு இன்னொரு குரல் ! ரெண்டும் என் மனசாட்சிதான். ஒரு மணில இருந்து என்ன பண்றதுன்னு தெரியாம, சாலமன் பாப்பையா மாதிரி ரெண்டு குரல்ல எது சொல்றதுல ஞயாயம் இருக்குனு கண்டுபிடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ரெண்டரை மணி நேரம் கழிச்சும் ஒரு முடிவுக்கு வர முடியல. "நீ சொல்றதும் சரிதான் ! நீ சொல்றதும் சரிதான்!" ன்னு சொன்னா ரெண்டுமே காரி துப்பும் ! அதன் பேசாம போற வரைக்கும் போகட்டும்னு சும்மா உக்காந்திருந்தேன்.


"மச்சி ! வாழ்க்கைனா இதெல்லாம் வேணும்டா ! இதெல்லாம் இல்லாத வாழ்க்கை உப்பு சப்பில்லாத சாப்பாடு மாதிரி !"

"ஆமா ! இவரு பெரிய வாழ்க்க வாழ்ந்துட்டாறு ! இப்ப புத்திமதி சொல்ல வந்திருக்காரு! முதல்ல லைப்ல செட்டில் ஆகுற வழிய பாருடா !"

"மச்சி ! பெரியவங்க என்ன சொல்லி இருக்காங்க ? நன்றே செய் ! அதையும் இன்றே செய்ன்னு சொல்லியிருக்காங்க ! அப்புறம் ஏன் கவலை படுற ?"

"டேய் ! அது உன் ஆறாங் கிளாஸ் கணக்கு டீச்சர் ஹோம் வொர்க் பத்தி சொன்னதுடா ! அத ஏன் இங்க இழுக்கற ?!!"

" எதுக்கு சொன்னதா இருந்த என்ன ? இதுக்கு சூட் ஆகுதுல்ல ! அதுதான் முக்கியம் ! மச்சி ! இதுவும் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி தான்டா ! எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது ! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வரும் !"

"இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் ஊர்ல பாதி பேரு பைத்தியமா அலையுரானுங்க ! "

இது இப்போதைக்கு முடியாது. இது அடுத்த ஸ்டேஜுக்கு போறதுக்குள்ள இந்த காண்வெர்சேசன ம்யூட்  பண்ணிட்டு பிரச்சன என்னனு சொல்லிடறேன்.

 அவளும் நான் இருக்கற அதே  ஏரியா தான். நான் காலேஜுக்கு போக சீக்கிரம் எந்திரிக்கிறேனோ இல்லையோ, காலைல அவ காலேஜுக்கு போகும் போது பாக்கனும்னே அவசரம் அவசரமா எந்திருச்சு கெளம்புவேன். அவள காலைல பாத்துட்டா அன்னைக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கை. அதுவும் அவ லைட்டா பாத்து சிரிச்சுட்டா அவ்வளோதான்! தண்ணி லாரியே எதிர்ல வந்தாலும் பிரேக் இல்லாம பைக் ஓட்டலாம் ! அந்த அளவுக்கு சூப்பரான நாளா அது இருக்கும் ! ஆனா இது எந்த அளவுக்கு உண்மைன்னு நான் இது வரைக்கும் டெஸ்ட் பன்னுனதில்ல. அப்படி டெஸ்ட் பண்ற ஐடியாவும் இல்ல. இதனால எனக்கு அவ மேல இருக்கறது காதலான்னு கேட்டா அதுக்கு பதில், தெரியாது ! கண்டிப்பா உலகத்துல இவ சிறந்த அழகி கெடையாது ! ஆனா இவள பாக்கும்போது மட்டும் ஏன் இதெல்லாம் தோனுதுன்னும் எனக்கு தெரியாது ! அவள பாக்கறப்ப எல்லாம் மனசு " அவள் அப்படி ஒன்றும் அழகில்லை !" ன்னு பாட்டு பாட ஆரம்பிச்சுரும் ! (ஆனா அவ கண்டிப்பா இந்த பாட்டுல வர்ற அஞ்சலிய விட அழகு!)

இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா "ஹாய்!" "ஹலோ" ல இருந்து "காலைல என்ன சாப்டிங்க?" "சட்னி தொட்டுக்க மறந்திராதிங்க!"ன்னு டெவலப் ஆயிட்டு இருந்துச்சு. இப்படிதான் ரெண்டு நாளைக்கு முன்னாடி அவ காலேஜ் போற பஸ் அன்னைக்கு லேட் ஆகி, தயக்கமா என்கிட்டே வந்து "எனக்கு காலைல பிராக்டிகல் எக்ஸாம் இருக்கு ! பஸ் இன்னும் வரல ! கொஞ்சம் காலேஜ் வரைக்கும் ட்ராப் பண்ண முடியுமா?"ன்னு கேட்டா. நான் சரின்னு உடனே சொல்லாம, லூசு மாதிரி 'குணா' லட்டு வாங்கற கமல் மாதிரி  ஒரு எபக்ட் கொடுத்து " ஆ ! வெல்(well) !" ன்னு ஆரம்பிக்கறதுக்குள்ள பாழா போன பஸ் வந்திருச்சு. அவளும் சிரிச்சி கிட்டே " நோ தேங்க்ஸ்!" ன்னு சொல்லிட்டு போய்டா !

(குரல் 1 - "ச்சு ச்சு ச்சு"

குரல் 2 - " டேய் ! அடங்குடா ! ")

அதான் இன்னைக்கு அவள டைரக்டா பாத்து 'அன்னைக்கு அதன பேரு அங்க இருக்கும் போது ஏன் என்கிட்டே மட்டும் அப்படி கேட்ட?' ன்னு மடக்கி ஒரு முடிவுக்கு வந்துராலாம்னு இப்படி அவ காலேஜ் முன்னாடி பைக்ல உக்காந்திருக்கேன். துரதிஷ்ட வசமா இன்னைக்கு சனிகிழமை ! இன்னைக்கு அவ காலேஜ் அரை நாளா இல்ல முழு நாளன்னும் தெரியல ! அதான் மதியம் ஒரு மணில இருந்து இப்படி கேட் முன்னாடி வெய்டிங் ! 

மணி நாலு ! இப்பதான் பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர்றாங்க. இப்படின்னு தெரிஞ்சிருந்தா மதியம் லஞ்ச் முடிச்சிட்டு பொறுமையா வந்திருக்கலாம். கடைசியா அவளும் வந்தா ! வழக்கம் போல தனியா தான் நடந்து வந்தா ! எனக்கு அவ கிட்ட புடிச்ச விஷயத்துல இதுவும் ஒன்னு. இந்த படத்துல வர்ற ஹீரோயின்ஸ் மாதிரி ஒரு மொக்க கேங் கூடவே சுத்தறது இல்ல. ஏன்னா தனியா பேசவே எனக்கு உதறும் ! இதுல்ல மொத்தமா வந்தா அவ்வளோதான் ! பயத்துல மயக்கமே போட்டுருவேன் ! தூரத்துல வரும் போதே என்ன பாத்துட்டா ! கண்ணுல ஒரு சர்ப்ரைஸ் ! அதெப்படி பொண்ணுங்க கண்ணு கூட பேசுது ! (குரல் 2 - "டேய் ! முடியலடா !") பக்கத்துல வந்ததும் " ஹாய் ! என்ன இந்த பக்கம் ?" ன்னு கேட்டா. நான் சிரிச்சிகிட்டே "இல்ல ! ஒரு வேலையா இந்த பக்கம் வந்தேன். அதான் ! " ன்னு வழிஞ்சேன்.

"ஓஹோ!"

"அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும்"

"என்னது?"

" இல்ல ! அன்னைக்கு ! நீ ! வந்து ! பஸ் வரலைன்னு ! என்கிட்டே கேட்டல ! ஏன் என் கிட்ட கேட்ட ?" 

காக்க காக்க சூர்யா மாதிரி லவ்வ சொல்லப் போய், பழைய கார்த்திக்கையும் கமலையும் மிக்ஸ் பண்ணி கேவலமா எனக்கே புரியாத மாதிரி கேட்டுட்டேன் ! ஆனா எப்படியோ அவளுக்கு மட்டும் புரிஞ்சிருச்சு ! சின்னதா டக்குனு ஒரு ஸ்மைல் தெரிஞ்சுது ! ஐயோ !  நெஞ்சுல கத்தியால குத்தி இருந்தா கூட இப்படி ஒரு வலி வந்திருக்காது ! சிரிச்சே கொன்னுட்டா ! (குரல் 1 - "கவிதை! கவிதை !")

"தெரியல ! கேக்கனும்னு தோனுச்சு ! அதான் கேட்டேன் !"

"இல்ல அன்னைக்கு பஸ் வந்திருச்சு. நீ கேட்டும் கூட்டிட்டு போக முடியல. கஷ்டமா இருந்துச்சு ! அதான் இன்னைக்கு ! உனக்கு எதுவும்  ப்ராப்ளம் இல்லேன்னா ! வேணாம்னாலும் ஒகே ! நான் புரிஞ்சிப்பேன் !" (குரல் 2 - " டேய் ! உளறி மானத்த வாங்காத !")

"ம்"

இந்த வௌவால் எல்லாம் காதுக்கே கேக்காத சோனார் அலைவரிசைல தான் பேசுமாம் ! அப்படிதான் இந்த 'ம்' மும் ! ஆனா இது மட்டும் எப்படி எனக்கு கேட்டுச்சுன்னு தெரியல ! மத்தியானம் சாப்டாம பசில கண்ணு காது எல்லாம் அடச்சிருந்தாலும் இந்த 'ம்' மட்டும் தெளிவா கேட்டுச்சு !


(குரல் 1 - "ஒரு ஆயிரம் பட்டாம்பூச்சி ஒன்னா பறந்தா  எப்படி இருக்கும் ?!"

குரல் 2 - "ச்சு ச்சு ச்சு !")

அப்படியே உலகத்த ஜெயிச்ச மாதிரி ஒரு பீலிங் ! அவ பைக்ல உக்காந்ததும் காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு!

(குரல் 1 - 'கண்கள் இரண்டால் ! உன் கண்கள் இரண்டால் !'

குரல் 2 - "லூசு ! அது அவ நடந்து வரும் போதுடா ! இப்ப 'பார்த்த முதல் நாளே' !" 

குரல் 1 - "ஒ ! சாரி !")

 வண்டி ஓட்ட ஆரம்பிச்ச உடனேயே இன்னும் இத எப்படி கொண்டு போலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன் ! பாதி வழில ஒரு பேக்கரி இருக்கு ! அங்க வண்டிய நிறுத்தி கொஞ்சம் சாப்டுகிட்டே பேசுனா என்ன ? கரெக்ட் ! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா !!

(குரல் 2 - "புது ஸ்டைல சொல்லுடா !"

குரல் 1 - "கண்ணா ! ரெண்டு லட்டு திங்க ஆசையா ?")

"இப் யூ டோன்ட் மைன்ட், பேக்கரில ஏதாவது சாப்டுட்டு போலாமா ?"

"ம்"

மறுபடியும் அதே சோனார் அலைவரிசைல "ம்" ! இந்த முறை ஹெல்மெட் போட்டு பின்னாடி அடிக்கற ஹார்ன் சத்தமே கேக்காம இருந்தாலும் "ம்" மட்டும் தெளிவா கேட்டுச்சு ! டக்குனு பிரேக் போட்டு பைக்க ரோட்டு ஓரத்துக்கு கொண்டு வந்தேன். பின்னாடி வந்த டவுன் பஸ் சட்டன் பிரேக் போட்டான். கண்டபடி கெட்ட வார்த்தைல திட்டுவான்னு நெனச்சா எதுவும் சொல்லாம போய்ட்டான் !

(குரல் 1 - " உன் நேரம் அப்படி டா ! யூ கேரி ஆன் !"  )

அந்த பேக்கரி கொஞ்சம் சின்னதுதான். ஒரு பத்து பதினஞ்சு டேபிள். சேர் இல்ல. எனக்கு இதுதான் கரெக்ட்னு தோனுச்சு ! அப்பதான் பக்கத்துல நிக்க முடியும் !  

ரெண்டு டீ, ஒரு ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட் பாக்கட்; பசில பாதி பாக்கெட்ட நானே காலி பண்ணிட்டேன் ! நான் சாப்புடுற ஸ்பீட பாத்து டக்குனு சிரிச்சிட்டா ! ஒரு செகண்ட் ஷாக் ஆயிட்டேன் ! அப்புறம் எனக்கும் சிரிப்பு வந்திருச்சு ! "சாரி ! பசி !" ன்னு சொன்னேன். அவ சிரிச்சிகிட்டே இருந்தா. அத பாத்தே மிச்ச பசி போயிருச்சு !

(குரல் 1 - "கொன்னுட்ட !")

அதுக்குள்ள  டிஸ்டர்ப் பண்ற மாதிரி எவனோ வெளிய இருந்து டீ ஆர்டர் பண்ணிட்டு ஹார்ன அடிச்சு இம்ச பண்ணிட்டு இருந்தான். அத கண்டுக்காம, லைட்டா "புடிச்சிருக்கா ?"ன்னு கேட்டேன்.

"என்னது ?"

" ம் ? இந்த பேக்கரி ! வாங்கி ரெண்டு பெரும் சேந்து டீ ஆத்தலாம் !"

மறுபடியும் க்ளுக்குனு ஒரு சிரிப்பு !

அதுக்குள்ளே ஹார்ன் சத்தம் இன்னும் அதிகம் ஆயி கடுப்பாயிட்டேன். திரும்பி எதாவது சொல்லலாம்னு நெனைக்கரதுகுள்ள " ஏம்ப்பா ! முதல்ல அவங்களுக்கு கொடுத்து அனுப்பு ! தல வலிக்குது !" ன்னு குரல் ! திரும்பி பாத்தா

"ஐயோ ! அம்மா !"

அப்படியே அதிர்ச்சில பெட்ல இருந்து கீழ விழுந்துட்டேன் ! மணிய பாத்தா சாயங்காலம் நாலரை !

பின்குறிப்பு :

அதிகாலை கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க ! இந்த சாயங்கால கனவு ! அப்ப பலிக்கவே பலிக்காதா ?!! 

சென்னையில் ஒரு வெயில் காலம் - Chennaiyil Oru Veyil Kaalam


posted by Tamilnambi on ,

2 comments

DISCLAIMER : இந்த ப்ளாக் போஸ்டின் தலைப்பில் 'வெயில் காலம்' என்று போட்டிருந்தாலும், இது எழுதப்பட்டதென்னவோ செப்டம்பர் மாதத்தில்தான். இந்த மாதத்தில் சென்னையில் எந்த காலமென்று சத்தியமாக எனக்கு தெரியாது. ஒருவேளை உங்களுக்கு தெரிந்தால் கமென்ட்டில் குறிப்பிடவும்.



 ஐ டி துறையில் போஸ்டிங் கிடைத்து, வேலையில் சேர்ந்த பின் ஒரு சில மாதங்கள் பெஞ்சில் இருப்பது ( அதாவது வெட்டியாக இருப்பதற்கு சம்பளம் வாங்குவது ) இப்பொழுதெல்லாம் சாதாரணம். ஆனால் வேலை கிடைத்து அதுக்கான டிரைநிங்கையும் முடித்து எந்த ஊர் ஆபிசுக்கு போய் பெஞ்சில் இருக்கப்போறோம்னு தெரிஞ்சுக்கவும் ஒரு சில வாரங்கள் பெஞ்சில் இருந்த சில பல 'அதிர்ஷ்டசாலி'களில் நானும் ஒருவன்.காலையில் லேட்டாக ஏந்திருத்தல், கிளாஸ் ரூம் போய் மெயில் செக் பண்ணுதல், மீண்டும் ரூமுக்கு வந்து டிவி பார்த்தல், மத்தியானம் முழுக்க தூங்குதல், இரவு புட் கோர்ட் போக சோம்பேறித்தனமாக இருந்தால் பிஸ்ஸா ஆர்டர் பண்ணுதல்.. இந்த கம்பனியை ஆரம்பித்த முதலாளி கூட இப்படி அனுபவிச்சிருப்பாராங்கறது டவுட்டுதான் !

இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு சின்ன குறுகுறுப்பு. இவ்வளவு வசதியும் செஞ்சு கொடுத்து, வெட்டியா உக்கந்திருக்கறதுக்கு சம்பளமும் தர்றாங்கலேன்னு; அதால, போஸ்டிங் இந்தியால எந்த மூலைக்கு போட்டாலும் சரி. குறை சொல்லாம போயிரலாம்னு முடிவு பண்ணுனேன். மத்தவங்கல்லாம் போஸ்டிங் இங்க கிடைக்கணும், அங்க கிடைக்கனும்னு கடவுள வேண்டிகிட்டு இருந்தத பாத்தப்பெல்லாம் சிரிப்பா வந்துச்சு. கடைசியா ரெண்டு வாரம் கழிச்சு அந்த நாளும் வந்துச்சு. அதிகாலை 10 மணிக்கெல்லாம் எழுந்திருச்சு, ரூமுல MTV AXE CLUB பாத்துகிட்டு இருந்தப்போ எல்லாரும் வெளிய பரபரப்பா 'போஸ்டிங் வந்திருச்சு! போஸ்டிங் வந்திருச்சு!' ன்னு ஓடிகிட்டு இருந்தாங்க. (எனக்கு எதோ சர்வர் ப்ராப்ளம்; அதால லேட்டா தான் வரும்னு சொல்லிட்டாங்க) போஸ்டிங் ஏதோ குலுக்கல் முறையில போட்ட மாதிரி இருந்தது. நெய்வேலிக்காரனுக்கு ஹைதராபாத் ! மதுரைக்காரனுக்கு திருவனந்தபுரம் !! பஞ்சாப்க்காரனுக்கு சென்னை !!!

கடைசியா மதியம் ஒரு மணிக்கு மேல எனக்கு போஸ்டிங் வந்தது. திறந்து பாத்தா எனக்கு பெரிய ஷாக் ! பெங்களுரு ! என் நண்பர்கள் வட்டத்துல எனக்கு மட்டும் தான் பெங்களுரு. போஸ்டிங் எங்க கெடைக்கும்னு இத்தனை நாளா யோசிக்கும் போது அஸ்ஸாம், அந்தமான் நிகோபர்னு எங்க ஆபிசே இல்லாத இடமெல்லாம் தோணுச்சே தவிர பெங்களுரு கெடைக்கும்னு நெனச்சு கூட பாக்கல ! ஒரு நிமிஷம் கை கால் ஓடல ! இதுக்கு சந்தோசப்படனுமா இல்ல வருதப்படனுமான்னும் புரியல ! பக்கத்துல இருந்த நண்பர்கள் கிட்ட விஷயத்த சொன்னேன். ஏற்கனவே ஏதோ நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எம்.எல்.ஏ களை வளைச்சு போடற அரசியல் கட்சி மாதிரி எல்லாரையும் சென்னைக்கு ஸ்வாப்(swap ~ transfer) பண்ண சொல்லிக்கிட்டு இருந்த என் நண்பர்கள் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னார்கள்.

சரி, பெங்களுரு செலக்ட் பண்ணி பப்புக்கு போய் தனியா தண்ணி அடிக்கறத விட, நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து மெரினா பீச்சுல சுண்டல் வாங்கி சாபிடுறது எவ்வளவோ பரவியில்லைன்னு நெனச்சு நானும் ஸ்வாப் கொடுத்தேன். அவனவன் ஸ்வாப் கொடுத்து 24 மணி நேரமா காத்திக்கிட்டு இருந்தாலும் எனக்கு கால் மணி நேரத்துலையே ஸ்வாப் ஆகி சென்னை கெடச்சிருச்சு.  என் நண்பர்களும் நான் ஏதோ பெரிய ஓட்ட பந்தயத்துல ஜெயித்த மாதிரி ஹை பை எல்லாம் கொடுத்தாங்க .

மைசூர்ல கடைசி நாள்..சென்னை கெடச்சவனல்லாம் வேற ஊருக்கும், வேற ஊர் கெடச்சவனல்லாம் சென்னைக்கும் ஸ்வாப் அப்ளை பண்ணி, அதுல பாதி பேருக்கு கெடச்சு பாதி பேருக்கு கெடைக்காம, பாதி சந்தோசமா பாதி துக்கமா எல்லாரும் பேக் பண்ண ஆரம்பிச்சோம். யார் யாரை பாத்தாலும் கேக்கற கேள்வி ஒன்னே ஒன்னுதான். "ஸ்வாப்க்கு முன்னாடி போஸ்டிங் எங்க? பின்னாடி எங்க ?" இந்த இடைப்பட்ட நேரத்துல என் பேரு எப்படியோ எங்க பேட்சுல ரொம்ப பாபுலர் ஆயிருச்சு. ஹாரி பாட்டர பாத்து எல்லாரும் ‘The Boy Who Lived’ன்னு சொன்ன மாதிரி, எல்லாரும் என்னை பத்தியும் ‘The Boy Who Swapped from Bangalore to Chennai!‘ன்னு  பேச ஆரம்பிச்சுட்டாங்க. நானும் ரொம்ப பெருமையா யார் கேட்டாலும், 'ஆமா, பிரண்ட்ஸ் கூப்டாங்க ! அதான் ஸ்வாப் பண்ணிட்டேன் !'ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சேன்.


இதுக்கு முன்னாடி சென்னைக்கு சில தடவைதான் வந்திருக்கேன். எனக்கு சென்னை பத்தி ஞாபகம் இருந்தது எல்லாம் இதுதான்: எப்பவோ பத்து வருசத்துக்கு முன்னாடி தாம்பரத்துக்கும் கிரோம்பேட்டைக்கும் நடுவுல இருந்த சொந்தகாரங்க வீடு, அந்த வீட்டுல குட்டி முதலை சைசுல இருந்த பல்லி, பாரிமுனைல இறங்கி டவுன் பஸ்ல போன சென்னை பல்கலைக்கழகம், முன்னாடி சென்னைல மெரினா பீச்சுக்கு அடுத்தபடியா பேமஸா இருந்து இப்போ ECR ரோட்டுல இருக்கற ஐடி கம்பனிகளுக்கு நடுல கொஞ்சம் கொஞ்சமா தொலஞ்சு போய்கிட்டிருக்கற MGM, VGP கோல்டன் பீச், etc.,. இத்தனைய ஞாபகம் வச்சிருக்கற நான் சென்னையோட வெயில மட்டும் ஞாகபம் வச்சுக்கல. ஞாபகம் வச்சுக்கலன்னு சொல்றத விட சட்ட பண்ணிக்காம விட்டுட்டேன்னுதான் சொல்லணும். சேலத்துலயும் நாமக்கல்லயும் யும்ன் பாக்காத வெயிலான்னு அசால்ட்டா விட்டுட்டேன்.


முதல் நாள் அதிகாலை கோயம்புத்தூரிலிருந்து ரயிலில் வந்து இறங்கி, சென்ட்ரல்ல ஒரு டாக்ஸி புடிச்சி ஆபிசுக்கு வந்து சேர்ந்தோம். என் ஞாபகத்தில் தாம்பரத்திலிருந்து ஒரு மணி நேர பஸ் பயணத்தில் வரும் சென்னை, இப்போது செங்கல்பட்டு வரை நீண்டிருந்தது. முதல் மூன்று நாட்கள் ஏசி ரூமிலேயே இருந்துவிட்டு, வாரக்கடைசியில் வீடு தேடி வெளியே அலையும் போதுதான் சென்னை வெயில் என்றால் என்னனு உறைத்தது. நம் உடம்பில் ரத்தத்திற்கு சரி சமமாக வியர்வையும் உள்ளதோன்னு சந்தேகமும் வந்தது.


மதியம் வருவர்தற்குள்ளேயே வீடும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம், மீண்டும் ரூமுக்கே போயிறலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டேன். பெரியவங்க ஆத்திரத அடக்குனாலும், இன்னோன்ன அடக்க முடியாதுன்னு சொல்லியிருக்காங்க; அந்த வரிசையில இந்த சென்னை வெயிலையும் சேத்துக்கலாம். ஏன்னா அன்னைக்கு நான் அந்த மாதிரிதான் ரூமுக்கு ஓடுனேன். அன்னைக்கு ரூமுக்கு வந்ததும், இன்னொரு உலக மகா யுத்தம் செய்யாமல் யார் முதலில் குளிப்பதென நானும் என் நண்பனும் எப்படி முடிவு செஞ்சோம்னு இன்னைக்கும் ஆச்சர்யமா இருக்கு.  கோயம்புத்தூரில் தினமும் பத்து நிமிடம் குளிக்கவே சோம்பேறித்தனமாக இருக்கும் நான், அன்று ஒரு அரை மணி நேரம் குளித்திருப்பேன். ஷவரை திறந்து விட்டு அரை மணி நேரம் யோசித்ததின் விளைவுதான் இந்த பிளாக் போஸ்ட்.


இனி வாழ்நாளில் இந்த வெயிலை எப்படி சமாளிக்க போறோம்னு யோசிச்ச போது சில எதுக்கும் உதவாத, ஆனால் வேடிக்கையான யோசனைகள் தோன்றின.அவற்றில் சில..



இனிமேல் கட்டிலில் மெத்தையை எடுத்து விட்டு, தண்ணீரால் நிரப்பி விடுவது; அதாவது வாட்டர் பெட் மாதிரி இது பாத் டப் பெட்!


வீட்டின் எல்லா அறைகளிலும் மின் விசிறிக்கு பதிலா, தோட்டத்தில் பயன்படுத்தும் ஸ்ப்ரின்க்லர்சை மாட்டி விடுவது !


சிவன் கோவில்களில், சிவலிங்கத்துக்கு மேலே சொம்பில் சின்னதா ஓட்டை போட்டு தண்ணீர் சொட்டுவதை போல இருக்கும் அதே மெக்கானிசம் உள்ள தொப்பியை பயன்படுத்துவது !

மருத்துவமனையில் குளுகோஸ் பாட்டில் தொங்கவிடும் கம்பியில் ஒரு வாட்டர் பாக்கெட்டையும், ஷவரையும் பிக்ஸ் பண்ணி - மொபைல் ஷவர் !

அப்புறம், அனுஷ்கா ஷர்மா அடிக்கடி டிவில வந்து ஒரு நாப்கின்ல முகத்த தொடச்சா ஒரு வாட்டர் பலூன முகத்துல உடைச்ச எபக்ட் வரதா சொல்றாங்க. ஆனா இது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு தெரியல.

சட்டையில உள்பாக்கெட்டுக்கு பதிலா, சின்னதா பேட்டரில ஓடுற மாதிரி ஒரு ஏசி கண்டுபிடிச்சு பிக்ஸ் பண்ணிரலாம். ஏன்னா, சிவாஜில ரஜினி போடற மாதிரி பெரிய ஏசி டிரஸ் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.

இப்ப வந்திருக்க புது டைப்பான 'வெதர் கோட்' பெயிண்ட்ட வீட்டுக்கு வெளிய அடிக்கறதுக்கு பதிலா, வீட்டுக்கு உள்ள அடிச்சரலாம். இதனால, எப்பவாச்சும் மழை பெஞ்சுதுனா, இல்ல நாமளே வீட்டு மேல தண்ணி ஊத்துனாலும், தண்ணி வீட்டுகுள்ளேயே இருக்கும், உள்ளேயும் சொட்டது ! குறைந்த விலையில் ஏசி !

இந்த வெயிலால் சில நல்ல விஷயங்களும் ஏற்பட்டது !

ரெண்டாயிரம் ரூபாய்க்கு வாங்குன ஸ்வெட்(வியர்வை) ரெஸிஸஂடன்ட் இயர் போன்ஸஂக்கு கடைசியா வேலை வந்தது !

கோயம்புத்தூர்ல ஒரு தடவை குளிக்கவே முக்கி முனகிட்டு இருந்த நான்,இப்போ 'பாபா' டெல்லி கணேஷ் மாதிரி ஒரு நாளைக்கு நாலு தடவ குளிக்கறேன்.(அட் லீஸ்ட் முதல் ஒரு மாசத்துலயாவது அப்படி குளிச்சேன். )

சில பேர் சொல்லலாம்; இதெல்லாம் ஒரு வெயிலா ! மே மாச கத்திரி வெயில இவன் பாக்கணும் ! இவனையெல்லாம் கொண்டுபோய் சஹாரா இல்ல தார் பாலைவனத்துல தள்ளனும் ! அப்ப தெரியும்னு.. மன்னிச்சிக்குங்க தோழர்களே ! கடந்த நாலு வருஷமா நான் தினமும் காலைல எந்திருச்சு காலேஜுக்கு போகும் போது கடவுள வேண்டிக்கிட்டு போகுறது இதுதான் ! 'கடவுளே ! இந்த சனியன் புடிச்ச மழை இன்னைக்கும் வந்து என் யூனிபார்ம நனைச்சிர கூடாது !' இப்படி வேண்டிகிட்டதுக்கு தண்டனையாதான் என்ன கடவுள் இங்க தள்ளிட்டார் போலிருக்கு !


கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செஞ்சபோது, அவர் தோழர் பிசிராந்தைய்யரும் அவரை போலவே வடக்கிருந்து உயிர் விட்டாராம். அதே மாதிரி என் நண்பர்கள் மட்டும் இங்க இருந்து அவஸ்தை பட்டா பத்தாதுன்னு நானும் இங்கே தெற்கே வந்து என் உயிரையும் விட்டு மத்தவங்க உயிரையும் எடுத்துகிட்டு இருக்கேன். இனிமே நட்புக்கு உதாரணமா என் பெயரையும் இந்த உலகம் சொல்லட்டும் !


பின்குறிப்பு:

இந்த ப்ளாக் போஸ்ட் எழுத ஆரம்பிச்ச ஒரு வாரத்துலையே இங்க பயங்கரமா மழை பெய்ஞ்சு, நாங்க வாடகைக்கு எடுத்த வீடு ஒரு தீவு மாதிரி மாறிப்போய், வானத்துல நட்சத்திரங்கள் அதிகமா இல்ல இந்த வீட்டுல தவளைகள் அதிகமான்னு நான் இன்னொரு ப்ளாக் போஸ்ட் எழுத நெனச்சது தனி கதை !


பின்பின்குறிப்பு:

இது எனக்கு மட்டும் தோணுனது தான். இதனால யாரும் இங்க வராதிங்க, எல்லாரும் ஓடி போயிருங்கன்னு நான் சொல்ல வரல.உண்மையிலே சென்னை ஒரு ரொம்ப நல்ல ஊர் ! வந்தாரை வாழ வைக்கும் நகரம்! ( அது வரைக்கும் நீங்க உயிரோட இருந்தா ! சாரி.. பழக்கதோஷம்.. மன்னிச்சு !!)

Rajapattai - ராஜபாட்டை


posted by Tamilnambi on ,

No comments





நீங்கள் ஒரு விக்ரம் ரசிகரா ? இளைய தளபதி விஜய் போல விக்ரம் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அந்தரத்தில் ஏன் பைட் பண்ணுவதில்லை என்று வருத்தபடுபவரா ? இல்ல தல அஜித் போல ஹீரோயின்ஸ வெளிநாட்டு டூயட் சான்குக்கும் வில்லன்கள் கடத்துறதுக்கு மட்டும் ஏன் யூஸ் பண்றதில்லைன்னு பீல் பண்றவரா ? இல்ல சூப்பர் ஸ்டார் ரஜினி போல 'கண்ணா !' ன்னு ஆரம்பிக்கற பஞ்ச் டயலாக் ஏன் சொல்றதில்லைன்னு புலம்பரவரா ? இல்ல உலக நாயகன் கமல் மாதிரி ஒரே படத்துல ஏன் பத்து கெட்டப் போடறதில்லைன்னு யோசிச்சிட்டு இருக்கறவரா ? அதுவும் இல்லேன்னா சிம்பு, தனுஷ் மாதிரி மட்டமான லிரிக்ஸோட ஒரு பாட்டை ஏன் விக்ரமே பாடலன்னு நெனக்கறவரா ? கவலை வேண்டாம் !! இதோ உங்களுக்காக ஒரு படம் !! ராஜபாட்டை !!


முதல்ல படத்து டைட்டில்ல இருந்து ஆரம்பிப்போம் ! ராஜபாட்டை !! கேக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா இந்த படத்துக்கு ஏன் இந்த பேர வச்சாங்கன்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியல ! ஒரு வேளை இந்த படம் ரோடு போடறதுல நடக்குற ஊழல் பத்தியோ இல்லேன்னா ஹீரோ இந்த படத்துல ஒரு ரோடு காண்ட்ரேக்டராவோ இருந்தா ஒத்துக்கலாம். அட அட் லீஸ்ட் படத்துல ' எப்பவுமே என் வழி தனி வழி' ஸ்டைல்ல 'எப்பவுமே நான் போற பாதை ராஜபாட்டை !' ன்னு ஒரு பன்ச் டயலாக் இருந்திருந்தா கூட பரவாயில்ல.. அதுவும் இல்ல ! அப்புறம் ஏன் இந்த படத்துக்கு ராஜபாட்டை ன்னு பேரு ?! ஒரு வேளை நேஷனல் ஹைவே ஓரத்துல நடக்குற நில அபகரிப்பு (land mafia) பத்தின படம்னா ? இருக்கலாம் !


அடுத்து ஹீரோ என்ட்ரி ! முதல்ல ரவுடிஸ் அட்டகாசமெல்லாம் காட்டிட்டு, கடைசியா ஒரு தாத்தா 'இதெல்லாம் தட்டி கேக்க சாமிதான் வரணும்'ன்னு சொல்றப்ப விக்ரம் என்ட்ரி ! அப்படியே கோயில் முன்னாடி அய்யனார் மாதிரி ஒரு பெரிய அருவாள கையில வச்சுட்டு மூணு லாங்க்வேஜ்ல பஞ்ச் டயலாக் பேசறார் ! கொஞ்சம் ஓவரா டயலாக் பேசறப்பவே லைட்டா இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோன்னு டவுட்டு வர ஆரம்பிச்சுது ! அதே மாதிரி இதெல்லாம் கனவுன்னு ஆயிருது ! இப்பெல்லாம் படத்துல எந்த ட்விஸ்டும் இல்லாம இருக்கறதுதான் பெரிய ட்விஸ்ட் ங்கற நெலைமை வந்துருச்சு !




அடுத்து ஹீரோ இன்ட்ரோடக்ஸன் சாங் ! இப்படி ஒரு விஷயம் படத்துல இல்லைன்னு தெரிஞ்சதும்தான் மனசுக்கு எவ்வளோ பெரிய நிம்மதி !! அடுத்து ஹீரோயின பாத்ததும் வர டூயட் சாங்கயும் 'ஆணியே புடுங்க வேணாம்'னு கேன்சல் பண்ணுனதும் ' சபாஷ் சுசிந்தரன் !' ன்னு சொல்லனும்னு தோணுச்சு. ஆனா உலகத்துலையே முதல் முறையா கிளைமாக்ஸ்க்கு அப்புறமா 'ரெண்டு லட்டு' ஐடம் சாங்க வச்சதும் 'பெரியப்பா ! நம்மள ஏமாத்திபுட்டாங்க பெரியப்பா !'ன்னு 'கண்டேன் காதலை' சந்தானம் மாதிரி அழ வேண்டியதா போச்சு. (ஏன்னா படத்துக்கு அம்மா கூட போயிருந்தேன். கிளைமாக்ஸ் முடிஞ்ச உடனே கூட கிளம்பி போக வேண்டிய கட்டாயம். நீங்க முன்னாடி போங்க, நான் ஸ்ரேயாவ பாத்துட்டு வரேன்னு சொல்ல முடியாதுல்ல..)


படத்துல கண்டிப்பா குறிப்பிட வேண்டிய கேரக்டர் ஒன்னு இருக்குன்னா அது கே. விஸ்வநாத் தான். படத்துல மத்த சீன் மாதிரியே இவர் சீன் ஒப்பனிங்கும் ரவுடிஸ் கூடத்தான். இவருக்கு ஒரு பிளாஷ்பேக்குன்னு ஆரம்பிச்சதும், போச்சுடா இனிமே செண்டிமெண்டா போட்டு புழிய போறங்கன்னு நெனச்சேன். ஆனா அவர் என்னடான்னா வெள்ளகாரன்கிட்ட சுதந்திரம் வாங்கறதுக்கு முன்னாடி எப்படி ஒரு வெள்ளகாரிய கரெக்ட் பண்ணுனாருன்னு ஆரம்பிச்சு, அம்மா கூட போற பொண்ண எப்படி சைட் அடிக்கறது, பொண்ண எப்படி ப்ரொபோஸ் பண்றதுன்னு ஐடியா மேல ஐடியாவா கொடுத்து நமக்கு இப்படி ஒரு காட்பாதர் இல்லாம போயிட்டரேன்னு பீல் பண்ண வச்சுட்டாரு.



படத்துல வேற முக்கியமான கேரக்டர்னா படத்தோட வில்லி 'அக்கா'வ சொல்லலாம். ஏதோ அக்கான்னு பேர் வச்சதால சொர்ணாக்கா மாதிரி தொண்டை கிழிய கத்தி நம்ம காத கிழிய வைக்கல. ஏதோ ஒரு மெகா சீரியல்ல வர்ற சைலன்ட் வில்லி மாமியார் மாதிரி கண்ண மட்டும் உருட்டி உருட்டி பயமுறுத்தறாங்க.

சரி படத்துல முக்கியமான எல்லாருக்கும் புடிச்ச முக்கியமான விஷயத்துக்கு வருவோம். ஹீரோயின்ஸ் !! தீக்ஸா ஷேத் ! சும்மா சொல்ல கூடாது ! சின்னதா ஒரு மூக்குத்தியோட படம் முழுக்க சிரிச்சிக்கிட்டே அழகா இருக்காங்க ! பாவம் கொஞ்சம் கொஞ்சம் டமில் மட்டுமே தெரிஞ்ச ஹீரோயின்கிட்ட இதவிட அதிகமா எதிர்பாக்கறது ரொம்ப அநியாயம் ! அப்புறம் 'வில்லாதி வில்லன்களும்' பாட்டுல வர்ற சலோனி ! 'மரியாத ராமண்ணா' (தெலுங்கு) பாத்து சலோனி பேன் ஆன நான் இனிமே அந்த போஸ்ட்ட ராஜினாமா பண்ணிரலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். அடுத்து ஷ்ரேயா அண்ட் ரீமா சென் ! சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.. படம் பாக்க வந்தவங்க எல்லாரும் க்ரெடிட்ஸ் முடியற வரைக்கும் போக கூடாதுன்னு எல்லா டைரக்டரும் என்னனம்மோ ட்ரை பண்றாங்க.. ஆனா யாருக்கும் இப்படி ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் ஐடம் சாங்க கிளைமேசுக்கு அப்புறம் வைக்கணும்னு தோணுனது இல்ல !!  



பாட்டெல்லாம் கேக்க ரொம்ப நல்லா இருக்கு. ஆனா தியேட்டர்ல பாக்கறப்போ கொட்டாவி வர்றத தடுக்க முடியல !

படத்துல எனக்கு புடிச்ச ரெண்டே விஷயம் ! ஹீரோவுக்கு நெருக்கமா இருக்கறவங்கள கொல்றதுக்கு எவ்வளவோ சான்ஸ் கெடைச்சும் அந்த மாதிரி எதுவும் கடைசி வரைக்கும் நடக்கல ! இதுல வர்ற வில்லன்களெல்லாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க ! அடுத்த விஷயம் கிளைமாக்ஸ் கோர்ட்லன்னதும் வில்லி குரூப் அங்கிருந்து தப்பிச்சு போக ட்ரை பண்ணி, அதுக்கு ஹீரோ பதினஞ்சு நிமிஷமா ஒரு கார் சேசிங் பண்ணி கடசீல பென்னி மில்ஸ்ல கொண்டு போய் நிறுத்தாம, சீன கோர்ட்லயே முடிச்சதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் !

சரி கடசீல நான் என்னதான் சொல்ல வரேன் ? இந்த படத்த பாக்கலாமா வேணாமா ? இப்படியெல்லாம் கேள்வி கேட்கபடாது. அதெல்லாம் நீங்கதான் முடிவு பண்ணனும். உங்களுக்காக நான் முடிவு பண்ண முடியாது. என்ன பொருத்தவரைக்கும் நான் இந்த படத்த பாத்து ரொம்ப என்ஜாய் பண்ணுனேன். ரெண்டு மாசம் கழிச்சு ப்ளாக் எழுதறேன்னா என்னை எவ்வளோ இன்ஸ்பைர் (inspire) பண்ணிருக்குன்னு பாத்துகோங்களேன் !  



இப்ப ரீசன்ட்டா படத்த பத்தி தெரிஞ்சுகிட்ட சில டிட் பிட்ஸ்:

  • இந்த படத்துல விக்ரம் மொத்தம் 17 கெட்டப்புல வர்றாராம். இத கின்னஸ்ல கொண்டு வர்ற முடியுமான்னு யோசிச்சிட்டு இருக்காங்களாம்.
  • படம் பாதி எடுக்கும் போதே சுசிந்த்ரனும் விக்ரமும் சேந்து இன்னொரு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டாங்களாம். ப்ரோடியுசர், கதை எல்லாம் ரெடி. ஷூட்டிங் எப்ப ஆரம்பிக்க போகுதுன்னு தெரியல.

Deiva Thirumagal - தெய்வத்திருமகள்


posted by Tamilnambi on ,

No comments


இந்த படத்தைப் பற்றி எழுத பேனாவை கையில் எடுத்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன. அனால் நான் நினைப்பதை சரியாக எழுத வார்த்தைகள் வரவில்லை. எங்கு ஆரம்பிப்பதென்றும் தெரியவில்லை. எங்கு முடிப்பதென்றும் தெரியவில்லை. என்னால் முடிந்த வரை இங்கு முயற்சிக்கிறேன்.

இப்படத்தை பார்ப்பதற்கு முன்பே இது ஒரு மன வளர்ச்சி குன்றியவன் பற்றிய படமென்றும், ஒரு தந்தை மகள் பாசத்தை பற்றிய படமென்றும், விக்ரமின் நடிப்பு திறமையை முற்றுமொருமுறை நிரூபிக்கபோகும் படமென்றும் தெரியும். பத்து முப்பத்தைந்துக்கு ஆரம்பிக்க வேண்டிய படம் ஏதோ கோளாறு காரணமாய் இன்னொரு முக்கால் மணி நேரம் தாமதமாய் ஆரம்பித்தது. ஆனால் படம் ஆரம்பித்த பிறகு, இந்த படத்தை பார்க்க இன்னொரு முக்கால் மணி நேரம் காத்திருந்தாலும் தப்பில்லை எனத்தோன்றியது.


படத்தை பார்க்க பார்க்க விக்ரமின் 'கிருஷ்ணா' கதாப்பாத்திரம் ஒரு கதாப்பாத்திரம் என்பதையே மறந்துவிட்டேன். கிருஷ்ணா சந்தோஷப்படும்போது நானும் சந்தோஷப்பட்டேன். கிருஷ்ணா அழும் போது எனக்கும் அழுகை வந்தது. கிருஷ்ணாவை யாராவது காயப்படுத்தினால் எனக்கு கோபம் வந்தது. வாழ்க்கையில் தினமும் எத்தனையோ வார்த்தைகளை உபயோகிக்கறோம். அவை எல்லாவற்றிற்கும் என்ன அர்த்தமென நம் மூளைக்கு தெரியும். ஆனால் இந்த மூளைக்கும் இதயத்துக்கும் பொதுவாக எங்கேயோ மறைந்திருந்து எல்லாவற்றையும் கட்டுபடுத்தும் இந்த மனதிற்கு வார்த்தைகள் தெரியாது; உணர்ச்சிகள் மட்டுமே தெரியும். அதனால்தான் சில நேரங்களில் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லாமல் தடுமாறுகிறோம். நீங்கள் என்னதான் உங்கள் மூளைக்குள் இருக்கும் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரியிலிருந்து ஒரு சில வார்த்தைகளை எடுத்து உபயோகித்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் திருப்தி கிடைக்காது.


ஏதோ என் மூளையில் ஒரு ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்சனரி இல்லாவிட்டாலும், இருக்கும் கோனார் நோட்சிலிருந்து, இந்த படத்தை பற்றி எழுத என்னால் கண்டுபிடிக்க முடிந்த ஒரே வார்த்தை : 'அழகு' . இந்த வார்த்தையை பல சமயங்களில் பல இடங்களில் பல அர்த்தத்தில் உபயோகித்திருக்கிறேன். ஆனால் இதை இங்கு உபயோகிப்பதின் மூலம் அதற்க்கெல்லாம் பிராயச்சித்தம் செய்வதை நினைக்கிறேன். இந்த படத்தின் ஒவ்வொரு ரீலில் உள்ள ஒவ்வொரு நிழற்படமும் அழகு. விக்ரமின் குழந்தைத்தனமான நடிப்பு அழகு. அனுஷ்கா அழகு. அமலா பால் அழகு. படத்தில் வரும் ஊட்டி அவலாஞ்சி கிராமம் அழகு. அங்குள்ள மக்கள் அழகு. மர வீடுகள் அழகு. ஜி வி பிரகாஷின் இசை அழகு. பாடல்கள் அழகு. பாடல் வரிகள் அழகு. இவை எல்லாவற்றையும் விட நிலாவாய் நடித்த பேபி சாரா அழகோ அழகு.

படம் முடியும்போது, இறுதி காட்சியில் பக்கத்தில் இருந்த அம்மா படம் அவ்வளோதானா எனக் கேட்க, தொண்டை வரை வந்த வார்த்தைகள் ஏனோ அதற்க்கு மேல் வராமல் தலையை மட்டும் ஆட்டினேன். அந்த உணர்ச்சிக்குரிய வார்த்தையை இன்னும் என் சிற்றறிவு கண்டறியவில்லை.நான் ஏதோ ஒரு சாதாரண பொழுதுபோக்கு படத்தை தலை மேல் தூக்கிவைத்து ஆடுகிறேன் என நீங்கள் நினைக்கலாம். நீங்களும் படத்தை போய் பாருங்கள். படம் முடியும்போது குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது மெளனமாக மனதில் ஒரு மகிழ்ச்சியும் துயரமும் நிறையும். அதை விவரிக்க முடியாமல்தான் இங்கு நான் திணறுகிறேன் என்பதை உணருவீர்கள்.


இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் படம் நன்றாக இருந்ததா என கேட்பதை விட, எத்தனை முறை உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினீர்கள் எனக் கேட்பதே சரியாக இருக்கும். வீட்டில் பாதி நேரம் மெகா சீரியல் பார்க்கும் குடும்ப ஸ்திரிகளை அழ வைப்பது சுலபம். ஆனால் நாள் முழுதும் நண்பர்களோடு ஊர் சுற்றிக்கொண்டு பிஸ்ஸா கார்னர்களில் நேரத்தை செலவிடும் எங்களை போன்ற இளைஞர்களையும் பிடித்து நிறுத்தி, வாழ்வில் நாங்கள் சர்வ சாதரணமாய் ரீசைகில் பின்னில் போட்டுவிடும் வாழ்வின் சின்ன சின்ன அழகான விஷயங்களை காட்டி, எங்களையும் கண் கலங்க செய்துவிட்டார் இயக்குனர் விஜய். விஜய் ! என் வாழ்வின் மூன்று மணிநேரங்களை இனிமையாக மாற்றியதற்காக மிக்க நன்றி !


இந்த பூமியில் நாம் வாழ்வதற்கு காரணம் ஆக்சிஜன், ஓசோன் படலம், புவியீர்ப்பு விசை என பல விஷயங்களை நியூட்டன், கலிலியோ எனப் பலர் பக்கம் பக்கமாய் டெரிவேசன் மூலம் நிரூபித்து பள்ளி காலங்களில் என் உயிரை எடுத்திருந்தாலும், வாடிகன் சிட்டி போப் முதல் எங்க ஊரு மாரியம்மன் கோவில் பூசாரி வரை பலர், பல சாமி பேரை சொல்லி அவைதான் காப்பாற்றுவதாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும், எனக்கு இந்த படத்தை பார்த்த பிறகு, மனிதர்களிடம் உள்ள எல்லா அறிவுக்கும் அப்பாற்பட்ட 'அன்பு' என்ற விஷயமே காரணம் என தோன்றுகிறது. அது மட்டும் இல்லாமல் போயிருந்தால் இந்நேரம் டைனோசார் எலும்புகளோடு நம் எலும்புகளையும் வேறொரு ஜீவராசி தோண்டியெடுத்து வரலாற்று பாடம் படித்து கொண்டிருக்கும்.

பின் குறிப்பு:
முடிந்தால் இப்படத்தின் ஒரிஜினல் டிவிடி வந்த பின், ஒன்றை வாங்கி வீட்டில் வையுங்கள். பிற்காலத்தில் உங்கள் பேரன் பேத்தி வந்து உங்கள் காலத்தில் வெறும் முன்னியும் ஷீலாவும் மட்டும்தான் வாழ்ந்தார்களா எனக் கேட்க்கும்போது உங்கள் மானத்தை காப்பாற்ற உதவும்.

Venghai - வேங்கை


posted by Tamilnambi on ,

No comments



படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி பெருசா எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இந்த படத்துமேல இல்ல. அதாலதான் படம் ரிலீஸ் ஆகி நாலு நாள் ஆனாலும் கண்டுக்காம இருந்துட்டேன்.(தியேட்டருக்கு போய் படம் பாக்கணுமான்னு நெனச்ச என்னோட சோம்பேறித்தனமும் இதுக்கு ஒரு காரணம்னாலும் அதப்பத்தி இங்க பேசப்படாது. ) கடைசியா வீட்டுல வெட்டியா இருக்கறது தாங்க முடியாம 80 ரூபாய் டிக்கெட்ட 105 ரூபாய்க்கு வாங்கி பாத்துரலாம்னு முடிவு பண்ணுனேன்.( அய்யயோ.. ப்ளாக் டிக்கெட் இல்லைங்க.. இது ஆன்லைன் டிக்கெட் !)

சரின்னு மத்தியானம் பெய்ஞ்ச மழையையும் பொருட்படுத்தாம அதால விவசாயம் பண்ண நல்லா உழுது போட்ட மாதிரி இருக்கற ரோட்டையும் சமாளிச்சு ஒருவழியா தியேட்டருக்கு போய் சேந்துட்டேன்.( 105 ரூபா டிக்கெட் ஆச்சே !) படம் ஆரம்பிச்சதுல இருந்து மனுசுக்குள்ள ஒரே ஒரு உறுத்தல். இந்த இங்கிலீஷ்ல Déjà vu ன்னு சொல்லுவாங்க தெரியுமா ? அதாங்க.. எதை பாத்தாலும் இதை எங்கயோ ஏற்கனவே பாத்த மாதிரி இருக்கேன்னு சில சமயம் தோணுமே, அதேதான். இதுதான் எனக்கு படம் முழுக்க தோனுச்சு.

நான் பத்தாங் கிளாஸ் படிக்கறப்போ எப்படி கணக்கு வாத்தியார் முக்கியம்னு சொன்ன கணக்க அப்படியே மனப்பாடம் பண்ணி, அப்படியே முழு பரிட்சையிலே அதை ஸ்டெப் மாறாம போட்டு நூத்துக்கு நூறு வாங்குனேனோ ( ஹி ஹி.. தற்பெருமையெல்லாம் இல்லைங்க.. சும்மா ஒரு உதாரணத்துக்கு சொல்றேன்), அதே மாதிரி தனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு சினிமா பார்முலாவ இன்னொரு தாட்டி ஹரி பெர்பெக்டா போட்டிருக்கார். முதல்ல இருந்து கடைசீ வரைக்கும் ஒரு ஸ்டெப் மாறல. நான் கண்டிப்பா சொல்றேன், ஹரி டைரக்டர் ஆகலேன்னா கண்டிப்பா கணக்கு வாத்தியார்தான் ஆயிருப்பார்.

அதே சமயம், இந்த படத்த பாக்கறப்போ இன்னொரு விசயமும் தெரியுது. ஹரிக்கு கொஞ்சம் கொஞ்சமா கற்பனை சக்தியோ இல்ல ஞாபக சக்தியோ குறைஞ்சிட்டே வருது. ஏன்னா, அவர் ஏற்கனவே எடுத்த எல்லா படத்துல இருந்தும் கொஞ்சம் கொஞ்சமா எடுத்து, இந்த படத்தோட கதைய உருவாக்கிட்டாரு. பாவம் அவரும் என்னதான் பண்ணுவாரு ! இப்ப அரிவாள் முன்னேற்ற சங்கத்துல இவர் மட்டும்தான் இருக்காரு. அதான் இவர் படத்துலயிருந்து இவரே காபி அடிக்க வேண்டிய நெலமை. சரி, அப்படி என்னதான் கதைன்னு கேக்கறிங்களா ?




'கோவில்' ராஜ்கிரண் அப்பாவுக்கு 'வேல்' சூர்யா ஸ்டைல்ல மகன் தனுஷ். அதே எரியால பிரகாஷ் ராஜ் எம்.எல்.ஏ. முதல்ல அடிதடின்னு ஜாலியா இருக்கற தனுஷ் அப்பா பேச்சை கேட்டு அமைதியா இருக்க திருச்சி வர்றாரு. ஆனா 'தமிழ்' பிரசாந்த் மாதிரி இருக்க நெனைக்கற தனுஷ வில்லனுங்க இண்டர்வெல்ல 'தாமிரபரணி' விஷாலா மாதிரறாங்க. முதல் பாதியில தனுஷ கொல பண்ண ட்ரை பண்ணுன பிரகாஷ் ராஜ் ரெண்டாவது பாதியில அப்பா ராஜ்கிரன்ன கொல பண்ண ட்ரை பண்றாரு. இதனால தனுஷும் 'ஐயா' சரத் குமாரா மாறி அவர் அப்பாவ காப்பாத்திட்டே வர்றாரு. இதுக்கு நடுவுல முதல் பாதியில அறிமுகமாகர தமன்னாவால ( இந்த கேரக்டர் கூட ஏதோ தமிழ் படத்துல வந்துதான். நாந்தான் மறந்துட்டேன்) ரெண்டாவது பாதியில ஒரு சின்ன ட்விஸ்ட்டு.( இந்த ட்விஸ்டால கதை 10 டிகிரி கூட திரும்பல). எனிவேஸ் கடைசில எப்படி இந்த 'ஐயா' சரத் குமார் 'சிங்கம்' சூர்யாவா மாறி பிரகாஷ் ராஜ கொல்றாருங்கறதுதான் மீதி கதை ! (எழுதுற என்னாலையே முடியலையே, இதை படிக்கற உங்கள நெனைச்சா எனக்கு இன்னும் பாவமா இருக்கு !)

இதுக்கு நடுவுல நீங்க எதிர்பாக்குற ஹீரோ இன்ட்ரொடக்ஸன் சாங், சிவகங்கைல இருக்கற ஹீரோ ஹீரோயின் சிங்கப்பூர் போய் பாடற சாங், ஒரு சோக சாங், ஒரு மெலடி சாங், கடைசில வர்ற ஒரு குத்து சாங், நடுவுல அப்பப்ப வர்ற தீம் சாங், அப்புறம் இதுக்கும் நடுவுல அங்கங்க கொழம்புல பிச்சுப்போட்ட கொத்தமல்லி மாதிரி கஞ்சா கறுப்போட அலறல் காமெடி எல்லாமே இருக்கு.மேலும் இதுல நீங்க விசில் அடிக்கனும்னே எழுதுன பஞ்ச் டையலாக்ஸும் உண்டு. எக்ஸாம்பிள் :
பருப்புல உசந்தது முந்திரி; பதவில உசந்தது மந்திரி
எப்புடி ஹரி உங்களால மட்டும் இதெல்லாம் முடியுது ! பேரரசும் டி.ஆர்ரும் இல்லாத கொறைய நீங்கதான் நெறைக்கிரிங்க.

இது எல்லாத்தையும் சேத்து சுருக்கமா எனக்கு பக்கத்துல உக்காந்து படம் பாத்தவர் மாதிரி சொல்லனும்னா " படம் சப்பையா இருக்கு !!" ( அப்புறம் நான் மட்டும் ஏன் இவ்வளோ பெருசா எழுதி இருக்கேன்னு நீங்க கேக்கலாம்.. என்னங்க பண்றது.. நாலு வருசமா இன்ஜினியரிங் படிச்சு இப்படி ஆயிட்டேன் ! )

பின் குறிப்பு :
இதெல்லாத்தையும் படிச்ச பின்னாடியும் நீங்க உயிரோட இருந்தா கம்மென்ட்ஸ்ல இந்த போஸ்ட பத்தி என்ன நெனைக்கிரிங்கனு எழுதுங்க. :)